
சாப்பாட்டுப் புராணம்
தேடித்தேடி விதவிதமான உணவு வகைகள் பற்றியும் அவை எங்கே கிடைக்கும். எந்த ஊர் என்ன உணவிற்கு பேர் போனது என்பதை எழுதியிருக்கிறார். இது போன்ற தமிழக உணவு கலாச்சாரம் குறித்த நுண்மையான பதிவுகள் மிக அரிதானது, சமஸ் உணவை மட்டுமின்றி அதன் பின் உள்ள கலாச்சார கூறுகளை. அந்த உணவின் மீது மக்களுக்கு உள்ள ஈடுபாட்டை, அந்த ருசிக்கு காரணமாக இருந்தவர்களின் செய்முறை நுட்பங்களையும் பதிவு செய்திருக்கிறார்.
சில சிற்றுண்டிகளை பற்றி அவர் எழுதும் போது அவரது நகைச்சுவை வாய்விட்டு சிரிக்க வைக்ககூடியது. தினமணி இதழில் ஈட்டிங் கார்னர் என்ற பத்தி மூலம் அவர் எழுதிய கட்டுரைகள் இவை.
மன்னார்குடி குஞ்சான் செட்டியார் கடை பக்கோடா பற்றி குறிப்பிடும் போது முதல்கடிக்கு மொறுமொறுப்பு அடுத்த கடிக்கு பதம். மூன்றாம் கடிக்கு கரைசல். அப்படியொரு பக்கோடா என்று பக்கோடாவிற்கான இலக்கணத்தை சமஸ் வரையறை செய்திருக்கிறார்.
ரவா பொங்கலை பற்றி எழுதும் போது அது பொங்கலுக்கு சின்னம்மா உப்புமாவுக்கு பெரியம்மா என்று என சுட்டிகாட்டுவது இயல்பான நகைச்சுவை.
ருசியான உணவை அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், தமிழக உணவு கலாச்சாரச் கூறுகளை விரும்புவர்களும் அவசியம் இதை வாசிக்க வேண்டும்.